நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 132.52 கோடி செலவில் திண்டுக்கல் மாநகராட்சி ஆறு பேரூராட்சிகள் மற்றும் 6 ஒன்றியங்களைச் சேர்ந்த 636 ஊரக குடியிருப்புக்கான கூட்டுக் குடிநீர் மற்றும் அரசியல் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.
இந்த விழாவில் நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வடிகால்துறை அமைச்சர் நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''திண்டுக்கல்லில் விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ. 206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகருக்கு கூடுதலாக 18 எம்.எல்.டி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு, புதிதாக 268 புதிய மோட்டார்கள் மாற்றப்பட உள்ளது. ரூ.131 கோடி செலவில் பைப் லைன்கள் அகற்றப்பட்டு புதிய பைப் லைன்கள் அமைக்கப்பட உள்ளது. புதிதாக அமைக்கப்படும் இந்த பைப் லைன் மூலம் 20 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.
நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து நேரடியாக தண்ணீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று கூறினார்.