சென்னையிலுருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்வே பாதை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக செல்கிறது.
இந்த வழித்தடத்தில் விருத்தாசலம் அருகே கவணை, செம்பளாக்குறிச்சி, சித்தேரிக்குப்பம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நாள்முதலாக ஓரிரு நாள் மழை பொழிந்தாலும் சுரங்கபாதை முழுக்க தண்ணீர் தேங்கி பல மாதங்களுக்கு குளம் போல காட்சியளிக்கும்.
அதனை அவ்வழியே கடந்து செல்லும் 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிடும். அந்த சுரங்க பாதை வழியாக நகரப்பகுதிக்கு வரும் விவசாய பொருட்களுடனான விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அன்றாட தேவைக்கும், வேலைக்கும் வரும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அக்கிராமங்களின் மக்கள் பலமுறை ரயில்வே நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்தும், போராட்டங்கள், சாலை மறியல் செய்தும், எவ்வித நடவடிக்கையும் கடந்த 5 ஆண்டுகளாக எடுக்கப்படவில்லை.
இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அப்பகுதி இளைஞர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே வழி இந்த சுரங்கப் பாதை என்பதால் இப்பாதையில் உள்ள தண்ணீரை வெளியேற்ற நிதி சேர்த்து மோட்டார் மூலம் நீரை அகற்றி வருகின்றனர்.
அரசாங்கத்தை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் விரக்தியடையாமல் தங்களுக்கு தேவையான பாதையை தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.