மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழர் அல்லாதவர் என்று நாம் தமிழர் கட்சியினர் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சீமான் மீது வைகோ கடுமையாக சாடினார். பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடித்தது.
இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான்,
’’தமிழர்தான் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் பேசிவரும்போது. அதை விட்டுவிட வேண்டியதுதானே. அது எப்படி தமிழர் மட்டும்தான் வரமுடியும் என்று கேட்கிற போதுதான் பிரச்சனை வருகிறது.
மற்றபடி, மதிமுக - நாம் தமிழர் இடையே ஒரு பிரச்சனையும் இல்லை. வைகோவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வைகோவுக்கு நான் பிரச்சனையாக தெரியலாம்.
வைகோவை நான் தமிழர் அல்லாதவராக பார்க்கவில்லை. வைகோ தமிழர் இல்லை என நான் கருதவில்லை. அதுபற்றி எனக்கொன்றும் இல்லை. இந்த விசயத்தை பற்றி இதற்கு மேல் பேசவேண்டாம். நான் அமைதியாக கடந்து போவது மாதிரி அமைதியாக கடந்த போக விட்டுவிடுங்கள். பலகோடி பிரச்சனைகளை தாங்கி நிற்கும் நிலம் இது. இதில் இது ஒரு பிரச்சனையே அல்ல.
வைகோ பெரியவர். அவருக்கு என்மீது வருத்தமோ கோபமோ இருக்கலாம். அவர் பேசிவிட்டு போகட்டும். அவர் பேச்சை கேட்டு அவரை நேசிச்சு வளர்ந்தோம். அவர் பேசும்போது பதிலுக்கு பதில் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மதிமுகவிற்கு எதிராக நான் கட்சி தொடங்கவில்லை’’ என்று பதிலளித்தார்.