தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் பண பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி அதற்கான விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் வாதங்களில் அமலாக்கத்துறை பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளது. குறிப்பாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி என்பவர் நிர்பந்திப்பதாக அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பொழுது நீர்வளத்துறை அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலங்களை பிரமாண பத்திரமாக உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அந்த பிரமாணப் பத்திரத்தில் சட்டவிரோதமாக மிகப்பெரிய அளவில் மணல் அள்ளப்பட்டதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நீர்வளத் துறைக்கு இதன் மூலம் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வாக்குமூலத்தில் அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதை தவிர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை எனவும், சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதத்தை வைத்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் வாதங்கள் நிறைவடைந்த பிறகு நாளை தீர்ப்பு வழங்கப்படும் என வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.