காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கர்நாடகா மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகம்- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடியைத் தாண்டியுள்ள நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2.10 லட்சம் கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 லட்சத்தில் இருந்து 2.10 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டு 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. கடந்த 1961- ஆம் ஆண்டு 2.75 லட்சம் கன அடி நீரும், 2008- ஆம் ஆண்டு 2.31 லட்சம் கனஅடி நீரும் திறக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் பாலம் அருகே உள்ள புதுப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதித்து சார் ஆட்சியர் வீர்பிரதாப் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதுப்பாலத்தில் மக்கள் நடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.