Skip to main content

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படும்-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 15/01/2023 | Edited on 15/01/2023

 

 The water level of Mullai Periyar Dam will be raised - Minister I.Periyaswamy's speech

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் விழா கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 182 வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பென்னிகுயிக்கின் சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ''முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். தேனி புதிய பேருந்து நிலையத்தில் பென்னிகுயிக் சிலை வைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.  முல்லை பெரியார் அணையின் பராமரிப்பு பணிகளுக்காக செல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு  ஏற்படும் இடையூறுகளுக்கு கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்