திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க மாவட்ட மகளிரணி செயலாளருக்கு இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலக்குண்டு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நேற்று தனது வீட்டின் முன்பு வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் இருவர் செய்தியாளர்கள் என கூறிக்கொண்டு செல்போனில் வீட்டை பலமுறை படம் எடுத்ததாகவும், ஏன் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மேலும் தொடர்ந்து அப்பகுதியில் தனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது சம்பந்தமாக வளர்மதியிடம் கேட்டபோது, இந்த பிரச்சனை குறித்து மாமா ( வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்) ஆபீசுக்கு தகவல் சொன்னேன். போலீசுக்கு புகார் கொடுக்கச் சொன்னார்கள் நானும் போலீஸ் ஸ்டேஷன் போய் பல மணி நேரம் காத்திருந்தும் இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கவில்லை. கடைசியில் சப்-இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்துட்டு வந்தேன். என்னைப் பழிவாங்கத் துடிக்கும் உள்ளூர் அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருவர் எனக்கு பல்வேறு வகைகளில் தொல்லைகளைக் கொடுத்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலில் இருக்கும் என்னை, கட்சியை விட்டு விரட்டுவதற்கு படாதபாடுபடுகின்றனர். வத்தலக்குண்டை பொறுத்தவரை அவர்கள் வைத்ததே சட்டம் என்பதால் அமைச்சர் அலுவலத்தில் இருந்து சொல்லியும், அதிகாரிகள் புகாரினை வாங்க மறுப்பதாகவும் கூறினார்.
அதிமுகவில் முன்னோடிகள் யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. ஆனால் எங்களை போல் உள்ள மகளிர் அணியினர்களுக்கு எல்லாம் அம்மா (ஜெ) இருந்தா இந்த நிலைமை வந்து இருக்காது என்று வருத்ததுடன் கூறினார்.