கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பாகவே, தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. ‘நீர்நிலைகள் பராமரிப்பு போன்ற எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்’ என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில், தண்ணீர்ப் பஞ்சத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீர்ப் பஞ்சம் அதன் உச்சபட்சத்தை எட்டி, கோரமுகத்தைக் காட்டி வருகிறது. வற்றாத கிணறுகளில் கூட இப்போது தண்ணீர் கிடைக்கவில்லை. குடிக்கும் நீரை விலைகொடுத்து வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என சோகத்தை வெளிப்படுத்தும் பொதுமக்கள், இதுகுறித்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
தண்ணீர்ப் பற்றாக்குறை என்பது தமிழகத்தின் பிரதான பிரச்சனையாக இருக்கிறது. வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் போது, இன்னும் பல மாவட்டங்களில் இது எதிரொலிக்கலாம். அதற்கு முன்பாக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு, பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.