தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், பூவிருந்தவல்லியில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீட்டுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பூவிருந்தவல்லி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளில் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் நகராட்சி ஊழியர்கள் ராட்சத குழாய்கள் மூலம் கழிவுநீர் கலந்த மழைநீரை அப்புறப்படுத்தி குமணன் சாவடி குட்டையில் விட்டனர். ஆனால், அந்தக் குட்டை நிரம்பி அங்கிருந்த நீர் அருகில் உள்ள அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்பில் புகுந்தது. வீட்டில் இடுப்பளவு கழிவுநீருடன் கலந்த மழைநீர் நிற்பதால் உடைமைகள் கழிவுநீரில் மிதக்கின்றன எனக் கவலை தெரிவித்துள்ளனர் அம்மன் கோவில் தெரு பகுதி மக்கள்.