18 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்ட நிலையில்… மீண்டும் ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏவின் பதவி பறிக்கப்படப்போவதாக என்ற பரபரப்பு சர்ச்சை எழுந்திருக்கிறது.
சென்னை தி.நகர் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சத்யா என்கிற சத்தியநாராயணன். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் வசித்துவருகிறார். கோடம்பாக்கம் முகவரியைக்கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்துதான் 2011-2016 சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு 130- வது வார்டு கவுன்சிலர் ஆனார். பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதே முகவரியைக்கொண்ட வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்திதான் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார்.
இந்நிலையில், தமிழக எம்.எல்.ஏவான சத்யா 2012-ல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி சட்டமன்ற தொகுதியிலும் வாக்காளர் அடையாள அட்டை வாங்கியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது.
இதுகுறித்து, சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோவிடம் நாம் கேட்டபோது, “படிவம்-6 பிரிவு 31-ன் ஒருநபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 17-ன் கீழும் பிரிவு 31 கீழும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 125 ஏ வின் கீழும் ஆறு மாதம் முதல் ஒராண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினரே இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் வைத்திருக்கிறார் என்றால் நிச்சயம் தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
அதுவும், தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா 2016 ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கலின்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் 2012 ஆகஸ்ட் 30-ந்தேதி 12 லட்சத்து 33 ஆயிரத்து 680 ரூபாய்க்கு 1200 சதுர அடி வீடு வாங்கியிருக்கிறார். இதுகுறித்து, 2016 சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுவின் அஃபிடவிட்டிலும் தாக்கல் செய்திருக்கிறார். அந்த, வீட்டின் முகவரியில்தான் ஆந்திர மாநிலத்தில் வாக்காளர் அடையாளர் அட்டை வாங்கியிருக்கிறார்.
ஒருவர் இன்னொரு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வாங்க வேண்டும் என்றால் ஏற்கனவே இருக்கும் வாக்காள அடையாள அட்டையை நீக்கம் செய்துவிட்டு புதிய முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும். ஆனால், எம்.எல்.ஏ. சத்யாவோ தனது வேட்புமனு தாக்கலில்கூட ஆந்திராவில் இன்னொரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை மறைத்திருக்கிறார். இதைவிடக்கொடுமை, சென்னையிலேயே எம்.எல்.ஏ. சத்யாவுக்கு இரண்டு முகவரியில் வாக்காளர் பெயர் உள்ளது. இப்படி, ஆந்திராவில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு… தமிழகத்தில் சென்னை முகவரியின் வாக்காளர் அடையாள அட்டையைப் பபயன்படுத்தி எம்.எல்.ஏவாக இருப்பது சட்டப்படி குற்றம். அதனால், இவரது எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்து சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர், தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு புகார் அனுப்பியுள்ளோம். மேலும், இரண்டு மாநில வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலில் மோசடியாக போட்டியிட்டு கவுன்சிலர் ஆனதால் தமிழக தேர்தல் ஆணையரிடமும் புகார் கொடுத்துள்ளோம்.
இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட அதிமுக திநகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யாவை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது எனது பூர்வீகமே ஆந்திராதான் ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னைதான். நான் ஆந்திராவில் இன்னொரு வாக்காளர்அட்டை வாங்கவில்லை காரணம் அந்த அடையாள அட்டையில் எனது பிறந்தநாள் தேதி தவறாக உள்ளது. நானே வாங்கியிருந்தால் உண்மையான பிறந்தநாள் தேதியை வைத்துத்தானே வாங்கியிருப்பேன்? அதனால் ஆந்திராவில் வாக்காளர் அடையாள அட்டை எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை என சமாளித்தார்.
ஏற்கனவே, 18 ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் சூழலில், எம்.எல்.ஏ. சத்யாவின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி அதிமுகவுக்கு புதிய சிக்கலை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.