திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவராக இயக்குநர்களால் தேர்வு செய்யப்பட்டவர் வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார். அமைச்சர் நிலோபர் கபிலில் ஊரில், கூட்டுறவு சங்க தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் பிடித்தார்.
இந்நிலையில், அதே கூட்டுறவு சங்கத்தில் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்த திமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுக்கும், தலைவர்க்கும் தனிப்பட்ட காரணத்தால் மோதல் வந்தது. அவர்கள் சில காரணங்களை குறிப்பிட்டு திமுக இயக்குநர்கள் இருவர் கூட்டுறவு சங்க செயலாளருக்கு கடிதம் தந்துயிருந்தனர். இதனை அறிந்த அதே சங்கத்தில் இயக்குநர்களாக உள்ள அதிமுக பிரமுகர்கள் இந்த விவகாரத்தை அமைச்சர் நிலோபர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இரண்டு மாதத்துக்கு முன்பு, சங்க தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் தந்தனர் அதிமுகவை சேர்ந்த இயக்குநர்கள்.
இதுப்பற்றி கூட்டுறவுத்துறை பதிவாளர் விளக்கம் கேட்டு சாரதிகுமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை மையமாக வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் தலைவரான சாரதிகுமார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 12ந்தேதி நடைபெற்றது. விசாரணையின் முடிவில், டிசம்பர் 13ந்தேதி காலை 11.00 மணிக்கு நகர கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுயிருந்தனர். இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறுவதற்கு திடீரென இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதோடு, திமுகவை சேர்ந்த இரண்டு இயக்குநர்கள் தந்துள்ள கடிதத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.