விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் முருகன், தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டார வள மையத்தில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியை சேர்ந்த கிரேஸிக்கும், 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த வடிவேல் முருகன், அண்மையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிரேஸியின் தம்பி அற்புதசெல்வம், இன்று(08-07-2019) மாலை வடிவேல் முருகன் பணிபுரியும் இடத்திற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால், வடிவேல் முருகனை குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வடிவேல் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்து சம்பவம் நடந்தபோது, அருகே அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். அவர்கள் அவரை காப்பாற்றாமல், செல்போனில் படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி உள்ளனர்.
ஆபத்தில் இருப்பவனை காப்பாற்றுவது தான் உத்தமம். ஆனால், ஒருத்தர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது, அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் செல்போனில் படம் எடுத்திருக்கின்றனர். எங்கே செல்கிறது இந்த சமூகம்? என்று வேதனைப்படும் அளவுக்கு தான் நிலைமை இருக்கிறது.