![m](http://image.nakkheeran.in/cdn/farfuture/kn21eGUCWnaX4kcWe7t-kGdvLahsF_JUJyP1FRrPQzQ/1541753132/sites/default/files/inline-images/murugadoss_1.jpg)
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பலமுறை கதவை தட்டினர். நான் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட் செய்துள்ளார்.
சர்கார் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் காட்சிகள் இருப்பதால் அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதா என்ற சோதனை மூலம் மறைமுக மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சர்கார் படத்திர்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக காவல்துறை அவரது வீட்டிற்கு சென்றுள்ளது என சர்கார் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்வீட் பதிவிடப்பட்டிருந்தது. அடுத்த ட்வீட்டில் அவர் வீட்டில் இல்லாததால், அவரைப் பற்றி விசாரித்துவிட்டு காவல்துறையினர் புறப்பட்டனர் எனவும் பதிவிடப்பட்டிருந்தது.
இது வழக்கமான ரோந்து பணியில்தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். கைது செய்யப் போகிறோம் என சன் பிக்சர்ஸ்-இன் ட்விட்டர் பக்கத்தில் வந்திருக்கும் செய்தி தவறு, நாங்கள் அதற்காக வரவில்லை என காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
ஆனால் இயக்குநர் முருகதாஸ், ‘’சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பலமுறை கதவை தட்டினர். நான் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர்’’என்று விளக்கம் அளித்துள்ளார்.