சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு தீபா‘வழி’ பிறந்திருக்கிறது.
ஒன்றிய நிர்வாகிகளைத் தன்பக்கம் வைத்துக்கொண்டு, கடந்த 8 மாதங்களாக, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியோடு ‘காய் விட்டு’ மோதல் அரசியலைத் தொடர்ந்து வந்த ராஜவர்மன், தீபாவளி நாளில் அதனை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும், அவரது ஆதரவாளரும் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான கா.ரவிச்சந்திரனுக்கும், ராஜவர்மன் இன்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்கிற ரீதியில், அமைச்சர் – எம்.எல்.ஏ. சந்திப்பில் ‘கெமிஸ்ட்ரி’ ஏதேனும் வெளிப்பட்டதா?’ எனக் கேட்டோம், கட்சி நிர்வாகி ஒருவரிடம். “சால்வை அணிவிக்க வந்தபோது ‘வாங்க ராஜவர்மன்..’ என்று அழைத்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவ்வளவுதான்!” என்றார்.
ராஜவர்மனைத் தொடர்புகொண்டு ‘இனி எதிரணி கிடையாதா?’ எனக் கேட்டோம். “முதல்வர் ஈ.பி.எஸ்.ஸும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும் இரண்டு மாவட்ட செயலாளர்களை அறிவிச்சிருக்காங்க. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும் கூட. எங்கள் இயக்கத்துக்கு மரியாதை அளித்து, சாத்தூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று, விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்கள் இருவரையும் முறைப்படி சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செய்திருக்கிறேன். வேறொன்றுமில்லை.” என்று முடித்துக்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக எதிர்திசையில் பயணித்துவந்த ராஜவர்மன், தற்போது திரும்பியிருப்பது ‘நேர்வழி’ என்றால் சரிதான்!