ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வரும் 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இது கண்டனத்துக்குரிய செயலாகும்.
அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.