“அகதிகளாக வாழ்ந்து பார்த்தால்தான் அவர்களின் மனவலியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். 28 ஆண்டுகளாக அகதி வாழ்க்கைதான் எங்களுக்கு வாய்த்திருக்கிறது.”
-அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் விருதுநகரில் மாவட்ட ஆட்சியரிடம் இந்தியக் குடியுரிமை கோரி மனு அளித்துவிட்டு வெளிப்படுத்திய குமுறல் இது!
பாலச்சந்திரன் என்ற அகதி தனது மனுவில் ‘இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக 1990-ல் ராமேஸ்வரம் வந்தேன். அதிகாரிகளின் விசாரணைக்குப்பிறகு கோல்வார்பட்டி முகாமுக்கு என்னை அனுப்பி வைத்தனர். ஆறு மாதங்களுக்குப்பிறகு ஆனைக்குட்டம் முகாமிற்கு மாற்றினர்.
ஒரு வருடம் கழிந்ததும் செவலூர் முகாமுக்கு மாற்றம். கடந்த 28 வருடங்களாக என்னுடைய அகதி வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இலங்கைப் போரால் நாங்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அகதிகளாகவே வாழ்க்கை தொடர்கிறது. இனியும் நாங்கள் செல்வோமா? அந்தக் கொடுமையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அங்கு எங்களுக்கு என்ன வாழ்வாதாரம் இருக்கிறது? இலங்கையில் எங்களுக்கென்று எந்த பொருளாதாரமும் இல்லை. எங்களது நிலையறிந்து, இந்தியக் குடியுரிமை அளித்து, குறைந்தபட்ச வாழ்வாதார திட்டத்தை ஏற்படுத்தித் தந்து, இந்தியக் குடிமக்களுக்குச் சமமாக இங்கேயே வாழ்வதற்கு வழிவகை செய்து தரவேண்டும்.’ என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.
பாலச்சந்திரனைப் போலவே மற்ற இலங்கை அகதிகளும் இன்னல் நிறைந்த தங்களின் வாழ்க்கைச் சூழலை மனுக்களில் விவரித்துள்ளனர்.
தொப்புள்கொடி உறவு என்று இலங்கைத் தமிழர்களுக்காகப் பரிந்து பேசும் தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கின்றனர். இந்த அகதிகளும் இலங்கைத் தமிழர்கள்தான். இவர்களின் பரிதவிப்பை அறிந்து ஆதரவுக்குரல் எழுப்புங்கள். இவர்களின் துயர வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திட அரசு முன்வர வேண்டும்.