கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதில் ஷிகெல்லா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் திருவள்ளூரில் ஷவர்மா பயன்படுத்த வைத்திருந்த 25 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அந்த பிரியாணியில் 'ஸ்டபைலோ காக்கஸ் ஆரவ்ஸ்' என்ற பாக்டீரியா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உண்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
நேற்று சேலம் மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் வளாகத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்வில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பங்குபெற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ''ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். நாம் உண்ணும் உணவை நமது தட்பவெட்ப நிலையை ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியாமல் வியாபார நோக்கத்திற்காக மட்டும் விற்கிறார்கள். எனவே இது போன்ற வெளிநாட்டு வகை உணவுகளை மக்கள் உண்பதை தவிர்ப்பது நல்லது'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் அசைவ உணவுகள் தயாரிக்கும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 19 அசைவ உணவுக் கடைகளில் மொத்தம் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.