தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று (06.04.2021) ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது, காலை 7 மணியளவில் தொடங்கி இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் நேற்று சென்னையில் வாக்களிக்க சென்ற பெண்மணிக்கு வாக்கு இல்லை என கூறியதால் செய்வதறியாது திகைத்தார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த சாலிகிராமம் பகுதியில் உள்ள தம்பாத் தெருவைச் சேர்ந்தவர் விஜயா. அந்தப் பெண்மனி நேற்று விருகம்பாக்கம் தொகுதி, காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஓட்டு இல்லை எனவும், அவர் இறந்ததாக பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பெண்மனியிடமே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அந்தப் பெண் கூறியதாவது, “கடைசியாக நான் என் கணவருடன் 2019ஆம் ஆண்டு இதே வாக்கு சாவடியில் ஓட்டு போட்டேன். ஆனால் தற்போது எனது கணவர் இறந்துவிட்டார்.
மேலும், இங்கு இறந்த எனது கணவருக்கு ஓட்டு இருப்பதாகவும், உயிரோடு இருக்கும் தனக்கு ஓட்டு இல்லை எனவும் அதிகாரிகள் கூறிவிட்டதால், ஏமாற்றத்துடன் எதுவும் புரியாமல் வெளியே வந்துவிட்டேன்" என்று அந்தப் பெண்மணி கூறினார்.