தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கரைக்கப்பட்டு வருகிறது.
விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பது குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தாலும் சில இடங்களில் எதிர்பாராத வகையில் விபத்துக்கள் நேர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் டிராக்டரில் விநாயகர் சிலையைக் கரைத்து விட்டு திரும்பிய போது டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகரில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சிலையை கரைக்கச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து ஜெகதீஸ்வரன் என்ற 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.