விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மனுதாரர்கள் அவ்வப்போது தற்கொலைக்கு முயல்வார்கள். அந்த திடீர் செயலைத் தடுத்து நிறுத்தி, அவர்களது உயிரைக் காப்பாற்றி விடுவார்கள், அந்த இடத்தில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள் நேரில் பாராட்டி நற்சான்றிதழும் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அப்போது மனு கொடுக்க வந்தவர்களில் ஒரு சிலர், காவல்துறையினரின் சோதனைகளைக் கடந்து, திடீரென்று உடலில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றது நடந்தது. அப்போது, அந்த இடத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் காட்சி ஊடகவியலாளர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தி உயிரைக் காப்பாற்றும் செயலில் இறங்கியதோடு, காவல்துறையினரிடமும் ஒப்படைத்தனர்.
தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல், தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றோரைத் தடுத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றிய பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களான ஜெயக்குமார், ராகுல்காந்தி, பெத்துராஜ், ராஜசேகர் ஆகியோரை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் நேரில் வரவழைத்துப் பாராட்டியதோடு, நற்சான்றிதழ்களும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மற்றும் காட்சி ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.