தமிழகத்தில் அரசு இயந்திரம் எத்தனை அலட்சியமாக இயங்குகிறது என்பதற்கு சிவகாசியில் இன்று நடைபெற்ற பட்டாசு உற்பத்தியாளர்களுடன் தீ விபத்துகளைத் தடுப்பது குறித்தான விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டத்தை உதாரணமாகக் காட்டலாம். இத்தனைக்கும் இந்தக் கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர்/தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை இயக்குநர் சி.கே.காந்திராஜன் இ.கா.ப. கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
காக்கும் பணி எங்கள் பணி என்ற வாசகம் மேடையை அலங்கரித்த பேனரில் இடம் பெற்றிருந்தது. உண்மையிலேயே பட்டாசு விபத்துகளைத் தடுத்து தொழிலாளர்களின் உயிரைக் காப்பதில் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறைக்கு எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சீசன் வியாபாரம் என்பதால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு விதிமீறலாகச் சில பட்டாசு ஆலைகள் செயல்படும்போது விபத்துகளும் உயிரிழப்புகளும் சர்வ சாதாரணமாகி விடுகின்றன. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டத்தை அவசரகதியில் ஹோட்டல் ஒன்றின் சிறு அரங்கில் பெயரளவுக்கு நடத்தியிருக்கின்றனர். முறையான அறிவிப்போ அழைப்போ இல்லாததால், பட்டாசு உற்பத்தியாளர்கள் 1000 பேர் கலந்துகொள்ள வேண்டிய கூட்டத்தில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ‘மைக்’ பிடித்த காந்திராஜன் இ.கா.ப. “தீபாவளி வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அதனால் அதிக அளவில் பட்டாசு உற்பத்தி நடக்கும். எனவே, தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டாசுகளைப் பாதுகாப்புடன் உற்பத்தி செய்ய வேண்டும். இந்த ஆண்டு விபத்தில்லா தீபாவளியாகக் கொண்டாட வேண்டும்.” என்றார் சுரத்தில்லாமல்.
இதுபோன்ற முக்கிய கூட்டங்கள் பிசுபிசுப்பதற்கு பட்டாசு உற்பத்தியாளர்களிடம் ஒற்றுமையோ, ஒருமித்த கருத்தோ இல்லாததும் ஒரு காரணம் என்கிறார்கள் பட்டாசு ஆலை வட்டாரத்தில்.
பட்டாசுத் தொழிலாளர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசுத்துறையும் பட்டாசு ஆலை அதிபர்களும் வெளிப்படையாகவே அலட்சியம் காட்டுவது கொடுமை அல்லவா!