புதுச்சேரி கவுண்டன்பாளையம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி(19), பெயிண்டர். இவர் தனது நண்பருடன் சில நாட்களுக்கு முன்னர் தட்டாஞ்சாவடியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சிகரெட் வாங்கி புகைத்துள்ளார்.
அப்போது அங்கிருந்த திருவண்ணாமலையை சேர்ந்த பவுன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பெட்டிக்கடையில் சந்தித்து ஒருவருக்கொருவர் சிகரெட் வாங்கி கொடுத்து நட்பை வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பவுன்குமார் விக்கியை போன் செய்து குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துள்ளார். பவுன்குமாரும் அங்கு சென்றுள்ளார். அப்போது பவுன்குமார் தான் வைத்திருந்த ஒரு பையை விக்கியிடம் கொடுத்து இதில் 150 கஞ்சா பொட்டலங்கள் உள்ளதாகவும், அதனை யாரிடமாவது விற்று கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
கஞ்சா பொட்டலங்களை பார்த்ததும் பயந்துபோன விக்கி தான் அதனை வாங்க மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் பவுன்குமார் விடாமல் அந்த பையை விக்கி கையில் திணித்து அதில் எத்தனை பொட்டலங்கள் உள்ளது என எண்ணுமாறு கூறியுள்ளார்.
விக்கி அதனை கீழே கொட்டி எண்ணியபோது பவுன்குமார் தனது செல்போனால் அதனை படம் பிடித்துள்ளார். பின்னர் விக்கியிடம் 'நீ கஞ்சா பொட்டலத்தை வைத்திருப்பது போல படம் என்னிடம் உள்ளது. அதனை போலீசிடம் காட்டி உன்னை மாட்டி விடுவேன்' என்று கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் பயந்துபோன விக்கி இதனை தனது அம்மாவிடம் கூறியுள்ளார். விக்கியின் அம்மா உடனே பவுன்குமாருக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டுள்ளார்.
உடனே பவுன்குமார், 'முதலில் ரூ.30 ஆயிரம் தான் கேட்டேன். விக்கி உன்னிடம் கூறியதால் இப்போது ரூ.60 ஆயிரம் தர வேண்டும்' என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன விக்கியின் அம்மா தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தினை எடுத்து கொண்டு போய் பவுன்குமாரிடம் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பவுன்குமார், 'நான் என்ன பிச்சைக்காரனா? 2 ஆயிரம் கொடுக்கிறாய். ஒழுங்காக கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் இந்த போட்டோவை போலீசிடம் கொடுத்து விடுவேன்' என கூறி மிரட்டினார்.
இதையடுத்து விக்கி கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பவுன்குமாரை தேடிவந்தனர். இந்தநிலையில் பவுன்குமார் நேற்று இரவு ராஜிவ்காந்தி சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கோரிமேடு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்று அங்கு நின்றுகொண்டிருந்த அந்த வாலிபரை பிடித்தனர். அவனிடம் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவனிடமிருந்து மொத்தம் 3 - 125 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது விக்கியிடம் பணம் கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்டான்.
அதையடுத்து போலீசார் கைது அவனை செய்தனர். அவனிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் 3- 125 கிவோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 50,000 ஆகும்.
குற்றவாளியை விரைந்து பிடித்த போலீசாரை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா, வடக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரட்ச்னாசிங் ஆகியோர் பாராட்டினர்.