திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு மோசஸ் என்பவர் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஜபகூட்டம் நடத்ததி வந்துள்ளார். இதற்கு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடிசை சர்ச்சில் ஒலி பெருக்கி கட்டக்கூடாது என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், கோயிலில் பாட்டு பாடினால் மோசஸ் தரப்பினரும் மாறி மாறி காவல்துறை மற்றும் கலெக்டரிடம் புகார் மனு தந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இரு குழுக்களிடையே அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ந்தேதி இரவு, மோசஸ் தனது ஜபகூடதில் ஒலிபெருக்கி அமைத்து, மதபோதகர்களை அழைத்து வந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகளை செய்துவந்துள்ளார். இதனை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் சென்று தகராறு செய்து தடுக்க முயன்றுள்ளனர். அதோடு வெளியூர் மதபோதகர்கள் ஊருக்குள் அழைத்து வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஒலிபெருக்கி அமைக்க வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அனுமதி கேட்டும், பண்டிகையை கொண்டாடக்கூடாது என தடுப்பவர்கள் குறித்து மனு அளித்துள்ளார் மோசஸ். இதையடுத்து போலீசார் சம்பந்திகுப்பத்தை சேர்ந்த இந்து அமைப்பை சேர்ந்த சக்திவேல் மற்றும் அருள் குமார் ஆகியோரை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் சொன்ன பதிலால் அதிருப்தியான போலிஸார், விழாவை தடுக்கமாட்டோம் என எழுதி தந்துவிட்டு செல்லுங்கள் எனச்சொல்லியுள்ளனர்.
முடியாது எனச்சொன்னதால், அவர்களை காவல்நிலையத்திலேயே உட்காரவைத்துள்ளனர். அவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் காவல்நிலையத்தில் தங்களை உட்காரவைத்துவிட்டதாக சொல்ல இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், அவர்களது உறவினர்களும் ஆத்திரம் அடைந்து வாணியம்பாடி - ஆம்பூர் கிராம சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் போலீஸார் அங்கு வந்தனர். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மத உரிமை உள்ளது. அவர்கள் திருவிழாவை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதனை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது என போலீஸாரும், வருவாய்த்துறையினரும் பேசி சமாதானம் செய்தனர்.
அவர்களின் உரிமையை தடுத்தால் தான் அவர்களை காவல்நிலையத்தில் உட்காரவைத்துள்ளோம் என போலீஸார் சொல்லினர். அவர்களை விடுவிக்க வேண்டும் என சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட குழுவினர் கோரிக்கை வைத்தனர். அவர்கள் எழுதி தந்தால் விட்டுவிடுகிறோம் எனச்சொல்லினர். இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர் அப்பகுதி மக்கள். இந்து அமைப்பை சார்ந்த இருவரும் எழுதி தந்துவிட்டு காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். வேறு எதுவும் தகராறில் ஈடுப்பட்டுவிடக்கூடாதுயென அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.