ட்ரிங்.. ட்ரிங்..
“அய்யா.. போலீஸ் ஸ்டேஷனா? எங்க வீட்டுக்குப் பின்னால இருக்கிற வைக்கப்போர்ல யாரோ தீ வச்சிட்டாங்க.. நீங்கதான்யா யாருன்னு கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்கணும்.”
“அடப்போய்யா.. எங்க எஸ்.பி. ஆபீஸ்லயே ஜன்னலை உடைச்சு, டாகுமென்ட்ஸ தீ வச்சி கொளுத்திட்டாங்க.. அவனையே இன்னும் எங்களால கண்டுபிடிக்க முடியல.. நீ வேற.. நேரம் காலம் தெரியாம வைக்கப்போர் அதுஇதுன்னு போன் பண்ணிட்டு இருக்க..”
யாரோ, ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, இதுபோல பேசி, பதிலுக்கு போலீஸ் தரப்பில் இப்படி ஒரு பதில் சொன்னார்கள் என்பது, கற்பனையாகவும் காமெடியாகவும் இருக்கலாம். ஆனால், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் இன்று இது சீரியஸாகவே நடந்திருக்கிறது.
துப்பாக்கி போலீசார் எப்போதும் நிற்கும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று, அந்த அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னலை உடைத்து, யாரோ வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்களுக்குத் தீ வைத்துவிட்டார்கள். அந்த அறையிலிருந்து புகை வெளியேற, காக்கிகள் உள்ளே சென்று பார்த்தபோது, ஆவணங்கள் பலவும் எரிந்து சாம்பலாகிவிட்டன. பிறகென்ன? ‘யாருப்பா நம்ம ஆபீஸ் ஜன்னல் கண்ணாடிய உடைச்சது? யாருப்பா தீ வச்சது?’ என்று காக்கிகளிடமே விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘உள்ளுக்குள் என்ன புகைச்சல்?’ என்று விசாரித்தபோது, குற்றப்பிரிவு அலுவலகத்தில் முக்கிய அதிகாரி ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வாராம். அவருக்கும் அங்கு பணிபுரிபவர்களுக்கும் ஒரே அக்கப்போராம். அந்த அதிகாரிக்கு அவப்பெயர் வாங்கித் தருவதற்காக, வேண்டாதவர் யாரோ விளையாட்டுக்குத் தீ வைத்து விட்டார் என்கிற ரீதியில் கிசுகிசுத்தார்கள்.
பாதுகாப்பு அதிகம் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலேயே, யாருக்கோ எரிச்சல் மூட்டுவதற்காக, ஆவணங்களைக் கொளுத்தி விளையாடியிருக்கின்றனர். காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது; இதயம் கெட்டுவிட்டது என்று அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருவதை, இச்சம்பவம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.