
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பி. குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா உட்பட இசையுலக பிரபலங்கள், பாடகர்கள், இசைப் பிரியர்கள் என அனைவரும் வீடியோ வாயிலாகவும், சமூக வலைத்தள பதிவுகள் வாயிலாகவும் தங்களது பிரார்த்தனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது எஸ்பி.பிக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு உயிர்காக்கும் கருவிகளான வென்டிலேட்டர், எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பியின் உடல்நிலை முன்னேறி வர, கூட்டுப் பிரார்த்தனை நடத்த இசையமைப்பாளர் இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் விஜய் ரசிகர்கள் எஸ்.பி.பிக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என விஜய்யின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.