தமிழகத்தில் தற்போது தினமும் கரோனாவுக்கு மத்தியில் அடுத்து எந்த செய்தி வருகிறதோ இல்லையோ, ஆனால் கள்ளச்சாராயம் காய்க்கும் கும்பலை பற்றியும், அதை அடித்து உடைக்கும் காவல்துறையினரை பற்றியும் கண்டிப்பாக செய்தி வருகிறது. அந்தளவு கள்ளச்சாராயத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மலை மேடுகள், மலை அடிவாரங்கள், தோட்டங்கள், வீடுகள் என கள்ளச்சாராயங்களை காய்ச்சி வருகின்றனா்.
இதில் குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் சாராயம் காய்ச்சி வந்த கும்பல்கள் , தற்போது வீடுகளில் பெண்கள் உதவியுடன் குக்கா் கேஸ் அடுப்பு உதவியுடன் சாராயம் காய்ச்சி வருகின்றனா். இதை கண்டுபிடித்து தடுக்கும் விதமாக காவல்துறையும் முமு வீச்சில் இறங்கியுள்ளது.
இந்தநிலையில் இன்று மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சாராய வாசனை வருவதாக உதவி ஆய்வாளா் சிவசங்கருக்கு அந்த பகுதியில் உள்ளவா்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது சமையலறையில் குக்கா் மூலம் சாராயம் காய்ச்சி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் சுமார் 15 லிட்டா் சாராயத்தை கீழே கொட்டியதுடன் அந்த வீட்டின் உரிமையாளர் பெண் ஷீபா (36), சுரேஷ் (44), மற்றும் ரசல்ராஜ் (66) ஆகிய மூவரை கைது செய்தனா்.
அதே போல் களியக்காவிளை திருத்துவபுரத்தில் பெனடிக் ஆன்றனி தனது வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவறையின் பக்கத்தில் கேஸ் அடுப்பு மற்றும் குக்கா் மூலம் பழங்களை கொண்டு சாராயம் காய்ச்சி அதை மண்ணுக்குள் ஊற வைத்திருந்தார்கள். இந்த வாசனை அந்த பகுதியில் உள்ளவா்களின் மூக்கை துளைத்ததுடன் அடிமையான குடிமகன்களுக்கு அதுவே போதையும் ஏற்றியது.
இதையடுத்து களியக்காவிளை உதவி ஆய்வாளா் ராஜரெத்தினம் சாராய ஊறல்களை வெளியே எடுத்து கீழே கொட்டியதுடன் பெனடிக் ஆன்றனியையும் கைது செய்தனா். இதே போல் குமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து வீடுகளில் சாராயம் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்புக்கு நடுவே இதை கட்டுப்படுத்த காவல்துறை திண்டாடி வருகிறது.