விருதுநகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண்ணிற்கு நீதி வேண்டி பா.ஜ.க. மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை “இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் செய்வதற்காக அல்ல..” எனக் குறிப்பிட்டார். ஆனாலும், துபாய் மர்மம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண நோக்கம்.. என்றெல்லாம் பேசிவிட்டு, “தேர்தல் நேரத்தில் மாற்று அரசியலை விரும்பும் மக்கள் பா.ஜ.க.வுக்கு அன்பு தர வேண்டும்.” என்றே முடித்தார்.
டெல்லியில் 10 வருடங்களுக்கு முன், ஒரே நேரத்தில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா விவகாரத்தோடு, விருதுநகரில் கடந்த 8 மாதங்களாக 8 பேரால் ஆபாச வீடியோ மிரட்டலோடு இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையை முடிச்சுப் போட்டு, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளி தி.மு.க.தான்..” எனத் திமுக மீதான தாக்குதலையே பெரிதாக அண்ணாமலை முன்னிறுத்த, ஆர்ப்பாட்ட மேடையில் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய பா.ஜ.க. நிர்வாகிகள் “எங்கள் புரட்சித் தலைவர்..” என அவரைப் புகழ்ந்து தள்ளினர்.
பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவர் அறிந்தோ, அறியாமலோ அந்தக் குற்றச் சம்பவத்தைக் குறிப்பிட்டபோது, “பாலியல் வன்புரட்சி..” என்ற புது வார்த்தையைப் பிரயோகித்தார். “ஸ்டாலின் நல்லவர் போல நடிக்கிறார்..” எனத் திட்டித் தீர்க்க அந்த ஆர்ப்பாட்ட மேடை பா.ஜ.க.வுக்கு தாராளமாகப் பயன்பட்டது.
அந்தப் பெண்ணிடம் எந்தெந்த இடங்களில் எப்படியெல்லாம் அந்த 8 பேரும் நடந்துகொண்டார்கள் என்பதை விலாவாரியாகப் பேசிய ஒரு நிர்வாகி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த ஜூனத் அகமது தற்காலிகமாக அக்கட்சி நீக்கியதைக் குறிப்பிட்டு என்று ஆளும்கட்சியான தி.மு.க., துணைபோவதாகக் கடுமையாக விமர்சித்தார்.
ஆர்ப்பாட்ட மேடையில் ஆளாளுக்கு ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த விருதுநகர் நகர பா.ஜ.க. சிறுபான்மை அணித் தலைவர் ஜாபர்சாதிக் “நானும் அந்த ஏரியாதான். எனக்கு அந்தப் பெண்ணையும் தெரியும். அந்தக் குடும்பத்தையும் நல்லா தெரியும். நான் சொல்வதெல்லாம் சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்..” என்று நம்மால் குறிப்பிட முடியாத ஒரு வில்லங்கமான வார்த்தையை மூன்று தடவை சொல்லிவிட்டு “அரெஸ்ட்டானதுல ஒருத்தன் எனக்குச் சொந்தக்காரன். அதுக்காக, அவன் கஞ்சா குடிக்கி இல்லைன்னா சொல்ல முடியும்? ஆம்பளையோ, பொம்பளையோ எல்லாரும் உயிர்தான். உண்மையிலேயே என்ன நடந்துச்சுன்னு தெரியாம, இந்தக் கேவலமான விஷயத்தை பப்ளிக்கா பேசிட்டு இருக்காங்க.” என்று வெள்ளந்தியாகக் கவலைப்பட்டார்.
‘நீதி வேண்டும்! பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாத விடியா அரசைக் கண்டிக்கிறோம்!’ என்ற பதாகையைக் கையில் வைத்திருந்த அருப்புக்கோட்டை விஷ்ணுபிரியா “அந்தப் பெண் இந்து என்பதால் யாரும் குரல்கொடுக்க முன்வரவில்லை. பா.ஜ.க. குரல் கொடுக்கிறது.” என்று இதிலும் மத அரசியலை முன்வைத்தார். அழைத்துவரப்பட்ட மூதாட்டிகளில் ஒருவரான செல்லத்தாய் “கையில கொடியைக் கொடுத்தாங்க, வச்சிருக்கேன். யாரும் எதுவும் கவனிக்கல தம்பி.. பெயரைக் கேட்கிறீங்க, எனக்கு பிரச்சனை எதுவும் வராதுல்ல..” என்று வறட்சியாகச் சிரித்தார்.
‘தி.மு.க.விடம் இருந்து விழித்திரு; விலகி இரு!’ என்ற அரசியல் கோஷத்தை பா.ஜ.க. முன்வைப்பதற்கு, பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரிதும் பயன்பட்டுள்ளது.