விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா வறண்ட பூமி என்பது யாவரும் அறிந்ததுதான். தமிழக அரசு, அந்தத் தாலுகாவில் தாமரைக்குளம், பொட்டல்குளம் பகுதியில் 102 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கைத்தறி மற்றும் கதர்த்துறை சார்பில், தென்மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் தொழில் பூங்கா அமைத்திடும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது. காணொளி காட்சி வாயிலாக இத்திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய விழா காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது.
தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என, தாமரைக்குளம், காரைக்குளம், எசலிமடை, செட்டிகுளம், மேலக்காஞ்சிரங்குளம், சென்னிலைக்குடி, கீழகாஞ்சிரங்குளம், கீழ இடையான்குளம், துலுக்கன்குளம், எஸ்.புதூர், குண்டுகுளம், கம்பாளி, உடுப்புகுளம், ஆவாரம்பட்டி, ஆனைக்குளம், நொச்சிகுளம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதனால், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் மனுகொடுப்பதற்கு 20 மாவட்ட கிராம மக்களும் திரண்டு வந்தனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். மக்கள் ஆவேசமாகி வாக்குவாதம் செய்தனர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி. நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு, மதுரை – தூத்துக்குடி சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு முன்னால், ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக கிராம மக்கள் காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் சிவஞானமோ, அம்மக்களை ஒரு பொருட்டாகவே கருதாமல், மனுவையும் பெற்றுக்கொள்ளாமல், அங்கிருந்து ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார். ஆட்சியரின் செயல் மக்களை கொதிப்படையச் செய்து சாலை மறியலில் ஈடுபட வைத்தது.
“இந்தப் பகுதியில் சாயப்பட்டறை துவங்கினால் போராட்டம் வெடிக்கும்..” என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்த கிராமத்தினர், “3000 ஏக்கர் நஞ்சை நிலம், பத்துக்கு மேற்பட்ட கண்மாய்கள், சாயப்பட்டறை கழிவு நீரால் பாதிப்படையும். விவசாயம், குடிதண்ணீர் மட்டுமல்ல…கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.” என்றார்கள் குமுறலோடு.
இத்தொழில் பூங்கா அமைவதன் மூலம், சுமார் 2000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், சுமார் 2000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற வழிவகை ஏற்படும் என்றும் தமிழக அரசு கருதுகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களோ “எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இங்கே வரவிடமாட்டோம்.” என்று போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.
மக்களா? திட்டமா? தமிழக அரசு விரைந்து முடிவெடுத்திட வேண்டும்.