கல்லூரி மாணவி தொடங்கி வாக்களிக்கச் சென்ற இஸ்லாமியப் பெண் வரை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று மதப்பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது ஒரு கும்பல். ஆனால் நாங்கள் இந்து- இஸ்லாம் என்ற பாகுபாடின்றி சகோதரத்துவத்தோடு தான் இருக்கிறோம் என்பதைச் செயல்வழியில் சொல்லி இருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஒன்றியம் ஆர்.புதுப்பட்டணம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், வள்ளி சுப்பிரமணியர் ஆலயத்தின் குட முழுக்கு இன்று (21/02/2022) நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தடபுடலாகச் செய்து கொண்டிருக்கும் போது கோபாலபட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமத்தினர், இணைந்து குடமுழுக்கு வரவேற்பு பதாகைகள், நுழைவாயில்களை அமைத்து அசத்தினர்.
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் தட்டுத் தாம்பூலத்துடன் கிராம மக்கள் சீர் கொண்டு வந்தனர். அதே போல இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர் நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க சித்திவிநாயகர் குடமுழுக்கு சீர் கொண்டு வந்தனர். விழாக் குழுவினர் மொத்தமாக நின்று இஸ்லாமியச் சகோதரர்களை வரவேற்று மரியாதை செய்தனர். தொடர்ந்து தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாகம் தீர்த்தனர்.
"எங்களுக்குள் ஓடுவது ஒரே ரத்தம் தான் எந்த வேற்றுமையும் இல்லை. சகோதரர்கள் நாங்கள்.. எங்கள் ஒற்றுமை எப்போதும் நீடித்திருக்கும்" என்கின்றனர் குடமுழுக்கில் பங்கேற்றவர்கள்.