விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று மாலை நகரம் முழுவதும் தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் 2 மணி நேரம் பல்வேறு இடங்களில் அந்த தகவல் உண்மையா என்பதை கண்டறிய தேடினார்கள். இறுதியில் நகர காவல் நிலையம் ஒட்டி உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் காவல் நிலையம் பின்புற பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளியின் வகுப்பறை பக்கவாட்டு வழியாக சென்று பார்த்த போது, நகர காவல் நிலையத்தின் பின்பகுதியில் பெண்ணின் தலை கிடந்தது தெரிய வந்தது. யாரும் பயன்படுத்தாத கழிவறை கதவு அருகில் அந்த பெண்ணின் தலை மற்றும் துண்டிக்கப்பட்ட இரண்டடி நீள தலைமுடி கிடந்தது. டவுன் டி.எஸ்.பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் அந்த தலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துண்டிக்கப்பட்ட அந்த பெண்ணின் தலை முகம் தீயில் கருகி மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு தலை துண்டிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸ் நிலைய வளாகம் அருகிலேயே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை கிடந்த சம்பவம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘நகர காவல் நிலைய வளாகத்தில் சடலம் கிடப்பதாக வதந்தி பரவியது. அது குறித்து விசாரணை நடத்தியதில், 2020ம் ஆண்டு பதிவு செய்த வழக்கில் அடையாளம் தெரியாத நபரின் உடலின், தலையை அடையாளம் காண பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வுக்குப் பின் வழக்கு விசாரணைக்காக போலீஸ் நிலைய பின்புறம் ஒதுக்குப்புறமான இடத்தில் அந்த மண்டை ஓடு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சில நாட்களாக பெய்த மழையில் பாதுகாப்பு பெட்டகம் சிதிலமடைந்து அதிலிருந்த மண்டை ஓடு வெளியே வந்து விழுந்ததாக தெரிய வருகிறது’ என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் போலீஸ் நிலைய பின்புறம் கிடந்த பெண்ணின் தலை சதையுடனும், ரப்பர் பேண்ட் போடப்பட்ட இரண்டு அடி நீள கூந்தல் தனியாகவும் தலையின் அருகில் கிடந்தது. மேலும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அந்த தலை கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி டி.என்.ஏ பரிசோதனைக்கு இறந்து போன மனிதர்களின் உடல் பாகங்களை தான் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். ஒரு முழு தலையையும் வெட்டியா பரிசோதனைக்கு அனுப்பி இருப்பார்கள் என பல்வேறு சந்தேக கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.