Skip to main content

“பைக்கில் இப்படி போகக்கூடாது” கண்டித்தவரை கொன்றவர்களுக்கு தண்டனை அறிவிப்பு!! 

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

Viluppuram ordered culprits for life sentence

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகில் உள்ள பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்(40). இவரது தம்பி பன்னீர்செல்வம். இவர்கள் இருவரும் பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்தனர். கரோனா நோய் பரவல் காரணமாக பெங்களூருவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு வந்தனர். 

 

அதே கிராமத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு என்பவரது மகன் அன்பு(24). கூலித் தொழிலாளியான இவர், அவரது நண்பர்கள் பாண்டியன், ஆனந்தராஜ், கார்த்திகேயன், மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட 6 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி அன்று அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதை பார்த்த பன்னீர்செல்வம், “இப்படி அதிவேகமாக ஆறு நபர்கள் ஒரே பைக்கில் செல்லலாமா. இது உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வருபவர்களுக்கும் தெருவில் நடமாடும் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களுக்கும் பெரும் விபத்தை உண்டாக்கும்” என்று கேட்டுள்ளார். இதனைக் கேட்டு கோபம் அடைந்த அன்பு மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து பன்னீர்செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டனர். 

 

இதைக்கண்ட பன்னீர்செல்வத்தின் அண்ணன் ஜெயபால், சண்டையில் ஈடுபட்டவர்களை விலக்கி உள்ளார். இந்நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற அவர்கள் 6 பேரும் சேர்ந்து இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் ஜெயபாலை தாக்கினர். அதனைத் தொடர்ந்து ஜெயபாலின் உறவினர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயபால் உயிரிழந்தார்.

 

இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார், அன்பு தலைமையிலான ஆறு இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் சிறுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளான அன்பு, பாண்டியன், ஆனந்தராஜ், கார்த்திகேயன் ஆகிய நால்வர் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

 

அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்ரமணியம் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், 10ஆம் தேதி இந்த வழக்கில் நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி அன்புக்கு ஆயுள் தண்டனையும் 2 ஆயிரம் அபராதமும், பாண்டியன், ஆனந்தராஜ், கார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்