![viluppuram Man arrested under goondas act](http://image.nakkheeran.in/cdn/farfuture/YTT7FpNfvU0USwg5yXon3JEo-0Zxn2heMalUQISOR8k/1613203019/sites/default/files/inline-images/jail-std_6.jpg)
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர் கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவைகளைத் தடுக்கும் பொருட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, அதில் உள்ள போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேபோல், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது, தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாக தேடியும் வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் அடுத்துள்ள புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் செஞ்சி காவல் நிலைய பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டு வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், பல்வேறு மாவட்டங்களிலும் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனடிப்படையில் முருகனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர் போலீஸார். ஆனால், மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த முருகன் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து முருகனின் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்படி முருகனை ஓர் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து செஞ்சி காவல் நிலைய போலீசார், முருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.