Skip to main content

இளைஞர் கொலை வழக்கில் 7 பேருக்கு தண்டனை! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Viluppuram court order life sentence for seven people

 

விழுப்புரம் மாவட்டம், ஆனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் கோபி(19). இவரது உறவினர் கலியமூர்த்தி. இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்(34) என்பவர் காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த கோபி மற்றும் இவரது சித்தப்பா சங்கர் அவரது மகன்கள் ராஜேஷ், ராஜபிரபு ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபி குடும்பத்திற்கும் லட்சுமணன் குடும்பத்திற்கும் இடையில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. 

 

இந்தநிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சங்கர் குடும்பத்தினர் கோபி வீட்டுக்கு வந்துள்ளனர். இதைப்பார்த்த லட்சுமணன், அவரது அண்ணன் நாகராஜ், மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேஷ், மணி, சரண், பாபு, ஐயப்பன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கோபி குடும்பத்தில் யாரையாவது கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி அன்று பிற்பகல் 3 மணியளவில் கோபியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தவர்கள் கோபி, ராஜேஷ், ராஜ பிரபு ஆகியோரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் கோபி படுகாயமடைந்தார். அவரை அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். ஆனால் அக்டோபர் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபி  இறந்து போனார். 


இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியின் இறப்பைக் கொலை வழக்காகப் பதிவு செய்தனர். இதற்குக் காரணமான லட்சுமணன் உட்பட 7 பேரைக் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன், நாகராஜ், வெங்கடேஷ், மணி, சரண், பாபு, ஐயப்பன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும் அதனுடன் ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்