விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ளது ஒரு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கார்த்திகேயன் அருகே ஏரிக்கரையில் உள்ள ஒருமரத்தில் பிணமாக தொங்கினார். கணவரை காணவில்லை என்று அவரது மனைவி தனது மாமனார் குமாரிடம், ஏரிக்குச் சென்று வருவதாகக் கூறி சென்ற கணவர் இதுவரை வீட்டுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
உடனே குமார் மற்றும் அவரது உறவினர்களுடன் கார்த்திகேயனை தேடிச் சென்றனர். அப்போது ஏரிக்கரைளில் உள்ள ஒரு மரத்தில் கார்த்திகேயன் பிணமாகத் தொங்கியுள்ளார். உடலில் காயங்கள் இருந்துள்ளன. மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் குமார்புகார் கொடுத்துள்ளார். அதை எடுத்து ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கார்த்திகேயன் மனைவி சாந்தி, கார்த்திகேயன் நண்பர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி அவரது நண்பர் சென்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் கார்த்திகேயன் தனது நண்பர் கலசப்பாக்கம் தாலுக்கா அனிச்சியாம் பட்டு தங்கமணியுணியுடன் கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சேர்ந்து சென்று வந்துள்ளார். இதில் கார்த்திகேயன் தங்கமணியிடம் நெருங்கிய நண்பராகப் பழகியுள்ளனர். இதையடுத்து தங்கமணி கார்த்திகேயனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்தார். அப்போது தங்கமணிக்கு கார்த்திகேயன் மனைவி சாந்திக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கார்த்திகேயனுக்கு தெரிய வந்துள்ளது. தனது கள்ளக்காதல் கணவனுக்கு தெரிய வந்துள்ளதால் இனிமேல் தங்கமணியை சந்திக்க முடியாது. எனவே கள்ளக்காதல் தொடர வேண்டும் அதற்கு இடையூறாக உள்ள கணவர் கார்த்திகேயனை தங்கமணி மூலம் தீர்த்துக் கட்டி விட்டால் நமது கள்ளக்காதலுக்கு இடையூறு இருக்காது என சாந்தி முடிவு செய்ததோடு அதை தங்கமணியிடமும் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்கமணி அவரது நண்பர் ராமச்சந்திரன் இருவரும் கார்த்திகேயனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று கார்த்திகேயனை மது குடிக்க வருமாறு ராமச்சந்திரனும் தங்கமணியும் ஏரிக்கரைக்கு அழைத்துள்ளனர். தங்கமணியும் சம்பவத்தன்று இரவு பத்தரை மணி அளவில் ஏரிக்கரைக்குச் சென்றுள்ளார். மூவரும் அங்கு அமர்ந்து மது குடித்துள்ளனர். மதுபோதையில் தங்கமணியும் ராமச்சந்திரனும் கார்த்திகேயன் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலைத் தரையில் தரதரவென்று இழுத்துச் சென்று அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தங்கமணி அவரது கூட்டாளி ராமச்சந்திரன் கார்த்திகேயன் மனைவி சாந்தி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.