கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் பணப்பை உள்ளிட்ட உடைமைகளைத் திருடி எடுத்துச்செல்ல முயன்ற ஊர்காவல் படை காவலரை இளைஞர்கள் சிலர் மடக்கிப்பிடித்து வாக்குவாதம் செய்யும் வீடியோ நாகை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை நாட்களில் நாகை மாவட்டத்தின் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வாடிக்கை, நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் கடற்கரை பகுதியில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. நாகை அடுத்துள்ள நாகூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள் தங்களது காரில் தங்களது பணப்பை உள்ளிட்ட உடைமைகளை வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்றிருந்தனர். அதை கவனித்துக்கொண்டிருந்த நாகை மாவட்டம் பணங்குடி பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படை காவலரான அரவிந்த் என்பவர், காரில் இருந்த பணப்பை உள்ளிட்ட உடைமைகளைத் திருடி தனது இரு சக்கர வாகனத்தில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றிருக்கிறார்.
ஊர்காவல் படைவீரரின் செயலை கவனித்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவரை மறித்து வாக்குவாதம் செய்ததுடன், வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களிலும் பதிவிட்டனர். சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோ காட்சியால் நாகை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீதான நடவடிக்கை குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.