Published on 15/06/2018 | Edited on 15/06/2018
கூடன்குளம் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சூழலியல் போராளி முகிலன் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். இதனிடையே அவரிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் 11வது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தை முகிலன் தொடர்ந்து வருகிறார்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் அறவழியில் ஈடுபட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் மீது தமிழக அரசு 380 வழக்குகளை போட்டு மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1500 நாட்களை தாண்டியும் இன்னும் 132 வழக்குகள் அந்த பகுதி மக்கள் மீது நிலுவையில் உள்ளது. கூடங்குளத்தில் புதிய அணு உலை திட்டங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் அரசு அந்த பகுதி மக்களுக்கு வழக்குகளை காரணம் காட்டி சம்மன் கொடுப்பதும், அவர்களின் பாஸ்போர்ட்களை முடக்குவதும் என மிரட்டி வருகிறது.
இந்த நிலையில் சூழலியல் போராளி முகிலன் மீது கூடங்குளத்தில் மக்களை திரட்டி போராடியதாக கடந்த 18/09/2017 தேதியன்று காவல்துறையினர் அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருந்து முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் போதெல்லாம் அவர் நீதிபதி முன்பு எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எத்தனை? அதற்காக அரசு கொடுத்துள்ள சம்மன்கள் எவ்வளவு? தான் சிறையில் இருப்பதால் அரசு வழக்குகளை விரைந்து நடத்த வேண்டும், தன்னை சட்டத்தினை மீறி கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற விஷயங்களை கேட்டும் வழக்கு குறித்த விபரங்களை அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சொல்லி முகிலன் கேட்டும் இதுநாள் வரை அரசு சார்பில் முறையாக பதில் அளிக்கவில்லை.
இந்தநிலையில் சுற்றுசூழல் போராளி முகிலன் கீழ் காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி உலக சுற்றுசூழல் தினமான 05/06/18 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இன்று (15.6.2018) 11வது நாளாகிறது. அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள்..
கூடன்குளத்தில் ஒரு லட்சம் மக்கள் மீது போடப்பட்ட 132 வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களை கொலை செய்த அதிகாரிகள் மற்றும் இந்த கொலைகார அரசு பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அனைத்து துறை அதிகாரிகள், ஆட்சியில் இருப்பவர்கள் மீது இ.த.ச பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். 48 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து அணுக்கதிர்களை வீசி பாதிப்புகளை ஏற்படுத்தும் அணுக்கழிவுகளை கூடன்குளத்திலிருந்து உடனடியாக மக்களுக்கு பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் எதற்கும் பயன்படாத அரசாணையை தூக்கி எறிந்து விட்டு இந்திய தமிழக அரசுகள் இணைந்து சிறப்புச் சட்டம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும். வெறும் கண்துடைப்புக்காக காவிரி ஆணையம் என்று தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் ஆணையம் அமைத்த மத்திய அரசை கண்டித்தும். தனது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முகிலன் பாளை சிறையில் தொடங்கிய போராட்டம் தொடர்வதால் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (14-06-2018) மாலை திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி மாவட்ட ஆட்சியரின் சார்பாக நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த முகிலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் முகிலன் பேச்சுவார்த்தையில்.. எனது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் தான் பட்டினி போராட்டத்தை முடிக்க முடியும் என்று உறுதியாக கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.. இன்று 11வது நாளாக மருத்துவமனையிலேயே உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளார். கூடன்குளம் வழக்குகளுக்காக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன்(15-06-2018) 271 நாட்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முகிலன் கோரிக்ககைளை ஏற்று அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கையெழுத்து இயக்கங்களை நடத்தி வருகின்றனர். அரசாங்கத்தின் கையில் ஒரு சூழலியல் போராளியின் உயிர்...