Skip to main content

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து! வருந்தும் திருநங்கைகள்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று விழுப்புரம் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடுவார்கள்.அப்படிப்பட்ட கூத்தாண்டவர் கோயில் திருவிழா, கரோனா வைரஸ் நோய் பரவும் என்ற அச்சம் காரணமாகவும், அரசின் 144  தடை உத்தரவின் காரணமாகவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

k


 

ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழாவின்போது   சித்ரா பௌர்ணமி அன்று இரவு திருநங்கைகள் பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொண்டு மறுநாள் காலை அரவான் களபலி கொடுக்கப்பட்டதும்,தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுது வெள்ளை புடவை அணிந்து கொண்டு ஊருக்குச் செல்வார்கள்.இதற்காக இந்தியாவில் உள்ள மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கேரளா இப்படி பல்வேறு நகரங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான திருநங்கையர்கள் இந்த விழாவுக்கு வருவார்கள். அதேபோன்று தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்களும் வந்து கூடுவார்கள்.

 

 

kk

 

மிகப்பிரமாண்டமான அந்தத் திருவிழாவின் நிகழ்வுகளை உலக அளவில் பல நாடுகளிலிருந்தும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் இருந்தும் காட்சிப்படுத்த வருவார்கள். இதற்க்காக உளுந்தூர்பேட்டை,கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய நகரங்களில் உள்ள திருமண மண்டபங்கள்,விடுதிகள் திருநங்கைகள் ஆடும் விழாவைக் காண வருபவர்களும் நிரம்பி வழியும்.

 

விழாவின்போது திருநங்கைகளின் ஒப்பனைகள், சிகை அலங்காரங்கள், நடை உடை பாவனைகள் இவைகளைக் காண்பதற்கே இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். திருநங்கைகளுக்காக விழுப்புரத்தில் அழகிப்போட்டி  நடனப் போட்டிகள், பேச்சுப்போட்டி  எனப் பல்வேறு நிகழ்ச்சிகள்  நடத்தப்படும். அதன் பிறகு சித்திரா பௌர்ணமி இரவு நிலவு ஒளியில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் பகுதி முழுவதும் விளக்குகளாலும் திருநங்கைகளின் வண்ண உடைகளாலும் ஜொலிக்கும்.

http://onelink.to/nknapp

 

k

 

இதைக் கண்டுகளிப்பதற்காகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் கூட்டம் மொய்க்கும்.அப்படிப்பட்ட திருவிழாவை கரோனா என்ற வைரஸ் தடுத்து நிறுத்தி விட்டது. இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த கூவாகம் நத்தம் சிவலிங்ககுளம் தொட்டி அண்ணாநகர் கீழ் குப்பம் வேலூர் பாரதி நகர் கொரட்டூர் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகள் அடங்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை காவல்துறை டிஎஸ்பி விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டார்.

 

கூட்டத்தில் பேசிய ஊர் நாட்டாமைகள் பேசியதாவது, உலகத்தையே மிரட்டி வரும் நோய் இந்திய அளவில் தமிழக அளவில் பரவாமல் தடுப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது அதற்காக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்தத் தடை உத்தரவு மீறக்கூடாது.அப்படி இருக்கும்போது திருவிழா நடத்துவது சரியாக இருக்காது.மேலும் திருவிழாவின்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் பொதுமக்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடுவார்கள். இதன் மூலம் கரோனா நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை நிறுத்திவைப்பதாக ஊர் நாட்டாமைகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் செய்யப்பட்டு அதை எழுத்துப்பூர்வமாக காவல்துறையிடம் ஊர் நாட்டாமைகள் ஒப்படைத்துள்ளனர்.

 

கரோனா என்ற நோய் உலக அளவில் பிரசித்தமான கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையே நிறுத்தி வைத்துள்ளது.கரோனவின் வலிமையை எப்படிச் சொல்வது என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.

 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது, இளைஞர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அதே போல் ஆண்டுக்கு ஒரு முறை பல்வேறு மாநிலங்களில் இருந்து கடல் கடந்து பல நாடுகளில் இருந்தும் கூட வருகை தந்து தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்திப்பது போன்று சந்தித்து உரையாடி உறவாடிச் செல்லும் திருநங்கைகள், இந்த ஆண்டு அப்படிச் சந்திக்க முடியாமல் உள்ள நிலைமையைக் கேள்விப்பட்ட திருநங்கையர்கள் வருத்தத்தில் உள்ளனர்.மேலும் இந்தத் திருவிழாவிற்கு வந்து செல்வதற்காக ஆண்டு முழுவதும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து வைத்து அதைக் கொண்டு செலவு செய்து சந்தோஷமாகக் கூவாகம் திருவிழாவிற்கு வந்து செல்வோம்.அப்படிப்பட்ட திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது வருத்தமாக இருந்தாலும் கூட, இப்போதுள்ள சூழ்நிலையில் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்’’ என்கிறார்கள் பல திருநங்கைகள்.

 

சார்ந்த செய்திகள்