தமிழறிஞர்களில் ஒருவரும் மேடை மற்றும் பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லை கண்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களிடம் எப்படி பிரிவினையை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசினார்.

இதற்காக பா.ஜ.க.வினர் கொதித்துப் போய் ஆர்பாட்டங்கள் செய்ய மாநில எடப்பாடி அரசு உடனே நெல்லை கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு வாரம் கழித்து நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் என்பவர் தலைமையில் இன்று அதன் நிர்வாகிகள் ஒரு சிலர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பற்றி தரக்குறைவாகவும், இழிவு படுத்தும் விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய அளவில் உள்ள ஒரு பெரிய கட்சியின் தலைவியாக உள்ள மாயாவதியை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் உத்தர பிரதேசத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை பற்றி தரக்குறைவாக பேசி உள்ள நெல்லை கண்ணன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.