விழுப்புரம் மாவட்டம், காங்கேயனூரைச் சேர்ந்தவர் அன்பரசன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பாக அன்பரசன் திடீரென உயிரிழந்தார். அதன்பிறகு அவரின் இரண்டு குழந்தைகளில் ஒருவரான கசிசர்மா(5), கடலூர் மாவட்டம், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த தனது தாய் மாமா ரஜினிகாந்த் வீட்டில் வளர்ந்துவந்தார். ரஜினிகாந்த் தனது சகோதரி மகனை பண்ருட்டி அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார்.
ஒன்றாம் வகுப்பு படித்து வரும் கவிசர்மாவை விடுமுறைக்காக அவரது தாய் வசித்து வரும் காங்கேயனூர் கிராமத்தில் கொண்டு போய்விட்டிருந்தார் ரஜினிகாந்த். தமிழ்நாடு முழுக்க நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், காங்கேயனூரில் இருந்தா கவிசர்மாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ரஜினிகாந்த் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வளவனூர், வாணியம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரஜினிகாந்த் சென்று கொண்டிருந்த போது தனியார் கல்லூரிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்றையொன்று முந்திச் செல்ல போட்டி போட்டுக்கொண்டு சாலையில் அதிவேகமாக வந்தன. அதில் ஒரு பேருந்து மற்றொன்றை முந்திச் செல்ல, அது எதிரே குழந்தை கவிசர்மாவோடு வந்த ரஜினிகாந்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், குழந்தை கவிசர்மா மற்றும் அவனது மாமா ரஜினிகாந்த் இருவரும் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் கவிசர்மா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய இரண்டு கல்லூரி பேருந்துகளின் ஓட்டுநர்களும் விபத்து ஏற்பட்டதும் உடனடியாக பேருந்தில் இருந்து குதித்து தப்பி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், கல்லூரி பேருந்துகளின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வளவனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி பேருந்து ஓட்டுனர்கள் இருவரையும் விரைவில் கைது செய்வதாக கூறி அவர்களை கலைந்துபோக செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வளவனூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தலைமறைவாக உள்ள பேருந்து ஓட்டுனர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.