Skip to main content

“காலமும் சரியில்லை, களமும் சரியில்லை.. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடிவெடுத்துவிட்டேன்..” டி. ராஜேந்தர் 

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

"The time is not right, the field is not right .. I have decided to stand aside and have fun." Rajendra

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மேலும் அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், தேசியக் கட்சித் தலைவர்கள் என தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

 

இந்நிலையில், இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அதிமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் களம். அதேபோல மறைந்துவிட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் இல்லாமல் திமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் களம். 

 

இரண்டு கட்சிகளுக்குமே அவரவருக்கு இருக்கிறது பலம். இது தவிர சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பக்கபலம். அது தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் புது சிகிச்சை.

 

ஒவ்வொருவருடைய வார்த்தையில் இருக்கக்கூடிய வாக்கு வன்மை, வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப்படும் உண்மை அதற்கென்று ஒரு சக்தி இருக்கிறது என்று முன்னாள் முதல்வர்கள் சிலர் நம்பினார்கள். அதன் அடிப்படையில் என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள், அது ஒரு காலகட்டம்...  கொள்கையை எடுத்துச்சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக்காலம். ஆனால், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஓட்டு பெற்றுவிடலாம் என்று நினைப்பது இந்தக்காலம். 

 

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை அதனால் கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். பத்தும்பத்தாததற்கு இது கரோனா காலம்... பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அணிய வேண்டும் முகமூடி. அதேபோல பக்குவப்பட்டவனாக இருக்க வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி. இந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுடைய லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை அரவணைக்கவும் இல்லை. நாங்கள் நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்