திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை இங்கு 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஊரடங்கு உத்தரவை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகரம், கண்ணமங்களம் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 70 சதவிதம் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் வெளியே வருவதை தடுக்க ஏப்ரல் 12ந் தேதி முதல் ஆரணி நகரம் முழு கடையடைப்பு என வருவாய்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அத்தியாவசிய பொருட்கள் கடை எதுவும் இயங்காது. அத்தியாவசிய பொருட்கள் வேண்டும், மளிகை பொருட்கள் வேண்டும் என்றால் நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள எண்ணுக்கு போன் செய்தால் அவர்கள் வந்து தந்துவிட்டு பணம் பெற்று செல்வார்கள். மருத்துவரை பார்க்க, மருந்து பொருட்களை வாங்க வெளியே வர கட்டுப்பாடு இல்லை. இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடுமையான தண்டனை தரப்படும் என மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எச்சரித்துள்ளது.