Skip to main content

முதியவரை மிரட்டி பணம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

villupuram kandamangalam senior citizen incident 

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் என்கிற சேட்டு (வயது 65) திருமணத் தரகராக இருந்து வருகிறார். இவர் புதிதாக ஒரு வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு சிமெண்ட் ஓடு வாங்குவதற்காக வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று உடல்நிலை சரியில்லாததால் இன்னொரு நாள் வந்து சிமெண்ட் ஓடுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணியபடி வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மீண்டும் தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் ராதாபுரம் அருகே மயக்கம் அதிகரித்துள்ளது. இனியும் வாகனத்தை ஓட்டினால் நிலைமை தடுமாறி கீழே விழுந்து விடுவோம் என்று எண்ணிய பலராமன் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் அருகிலேயே அமர்ந்துள்ளார்.

 

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் பலராமனிடம் விசாரித்துள்ளனர். தனக்கு லேசான மயக்கம் சோர்வு இருப்பதாகவும் தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று சேர்க்குமாறும் கூறியுள்ளார். அந்த இளைஞர்களும் பலராமனை அவரது இருசக்கர வாகனத்திலும் அவர்கள் வந்து இரு சக்கர வாகனத்தில் ஒரு இளைஞன் என இரண்டு வாகனத்தில் பலராமனை அமர வைத்து அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். செல்லும்போது திருக்கனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுமாறு கூறி பணம் கொடுத்துள்ளார். அப்போது அவர் அதிக அளவு பணம் வைத்திருப்பதை இரண்டு இளைஞர்களும் நோட்டமிட்டுள்ளனர்.

 

இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு திருமங்கலம் சுடுகாட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு பலராமனை மிரட்டி அவர் வைத்திருந்த ஒரு லட்சத்து இருபதாயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். மயக்க நிலையில் உள்ள தனக்கு உதவி செய்ய வந்தவர்கள் தன்னிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியவர் பலராமன் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சபாபதி சப் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதியோருக்கு உதவி செய்வதாக நடித்து அவரிடமிருந்து பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களின் செயல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்