கொள்ளிட ஆற்று வெள்ளத்தால் சிதம்பரம் அருகே தீவாக மாறிய கிராமங்களை படகு மூலம் சென்று ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வரும் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி கடைமடை பகுதியான கொள்ளிட கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து உள்ளது. சிதம்பரம் அருகே அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுகாட்டூர்,கீழகுண்டலபாடி கொள்ளிட்டக்கரை கிராமங்கள் தீவு போல் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் படகு மூலம் கடந்த 4 நாட்களாக வந்து செல்கிறார்கள். சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் அப்பகுதியில் முகாமிட்டு வருவாய் துறையினர் மூலம் படகு உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளார். இந்நிலையில் வியாழன் காலை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குநர் ஆனந்தராஜ், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் அரசு அதிகாரிகளுடன் படகு மூலம் கிராமத்திற்கு சென்று முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் வரவுள்ளது என்று தகவல் வந்துள்ளது. அதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போய்விடும் என்று அச்சப்பட தேவையில்லை. பகல்,இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள இளைஞர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆற்றுக்கு அடுத்த கிராமமான பெராம்பட்டு மற்றும் இதே பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு வழங்கபடும் என்றார். இப்பகுதியில் உள்ள மக்கள் பழைய கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அரசுக்கு அனுப்பிவைத்து பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.