இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிவேகமாக பரவி பல உயிர்களை மரணிக்கச் செய்துள்ளது. தமிழகத்திலும் மிக அதிகமாக பரவிவருகிற காரணத்தால் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து கட்டுக்குள் கொண்டு வர அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதற்காக இன்றுமுதல் (24.05.2020) சில அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் யாரும் தேவையில்லாமல் வெளியே நடமாடக் கூடாது, அவ்வாறு மீறி நடமாடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள், மருந்துகள் என தட்டுப்பாடுகள் ஏற்பட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இன்னும் பல பேர் கரோனாவின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாமல் வெளியே நடமாடிவருகின்றனர். அதனால் தமிழகம் முழுவது காவல்துறையினர் பல இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் சென்னை கோயம்பேடு அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வருவோரிடம் தகுதியான சான்றுகள், இ-பாஸ் போன்றவை உள்ளதா என விசாரித்து, பின்னர் அதனை சரிபார்த்து அனுமதிக்கின்றனர்.