பொன்னியின் செல்வன்... எழுத்தாளர், பத்திரிகையாளர் கல்கி எழுதிய இந்தப் புதினம் தமிழின் மிக மிக பிரபலமான, காலங்கள் கடந்து நிற்கும் படைப்பாகத் திகழ்கிறது. இந்த கிண்டில் காலத்திலும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் புத்தக வடிவங்கள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன. தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர், கமல் தொடங்கி பலருக்கும் இக்கதையை படமாக்கும் கனவு இருந்தது. இதற்கான முயற்சிகள் அவ்வப்போது தொடங்கப்பட்டு தொடராமல் போயின. இந்தக் கதையின் பிரம்மாண்டத்தை திரையில் கொண்டு வருவதும், முழு கதையையும் சுவாரசியம் குறையாமல் மூன்று மணி நேரத்துக்குள் சுருக்குவதும் பெரும் சவாலாகும். இந்த சவாலை எடுத்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து ஜெயமோகன் எழுத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டு பகுதிகளாக உருவாக்கி வருகிறார். இந்நிலையில் இந்தக் கதையை வெப்சிரீஸாக உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
சரத்குமார் ஜோதி
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் கதையை வெப் சிரீஸாக, பிரபல இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய சரத்குமார் ஜோதி இயக்குகிறார். இந்த வெப் சிரீஸின் பெயர் 'புதுவெள்ளம் பொன்னியின் செல்வன் சீசன் 1'. ”பல்வேறு தடைகளுக்குப் பிறகு ஸ்கிரிப்ட் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்று குறிப்பிட்டு இது தொடர்பான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.