தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்டது மந்திசுனை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'முற்றுகை போராட்டம்' என்ற பதாகையுடன் அணிதிரண்டு வந்தனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மந்திசுனை கிராமத்தினர் ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றி நூலகம் மற்றும் கால்நாடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், ஊராட்சி மன்ற தலைவர் மீதே மந்திசுனை கிராமத்தினர் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில் மந்திசுனை கிராமத்தினர் தெரிவித்திருப்பதாவது, மந்திசுனை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் நூலக கட்டிடம், கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்து ஆண்டிபட்டி வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் நேரடியாக ஆய்வு செய்தனர். மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட வாய்மொழி உத்தரவும் பிறப்பித்தனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனி நபர் ஒருவர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு நூலக கட்டிடம், கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு மந்திசுனை கிராம பொதுமக்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவரிடம் கிராம மக்கள் சார்பாக மனு கொடுத்தும் அந்த மனுவுக்கு தீர்மானம் செய்ய முடியாது என்று ஊராட்சி மன்ற தலைவர் கூறிவிட்டார். இதன் மூலமே, ஊராட்சி மன்ற தலைவர் தனிப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. இதனால், விரைந்து அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நூலக கட்டிடம் மற்றும் கால்நடை மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மந்திசுனை கிராமத்தினர் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும், நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மந்திசுனைக் கிராமத்தினர் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி பின்னணி குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.
தேனி மாவட்டம், கடமலை மயிலை அருகே கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க ஊராட்சி மன்ற தலைவரே தடையாக இருப்பதாகக் கூறும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.