கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கவனை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டடங்கள் முழுவதுமாக சேதமடைந்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு கல்வி அலுவலருக்கு அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக, தனியார் வீட்டில் மாணவர்கள் பயில்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டன. ஆனால், புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்டப்படுவதற்கான எந்தவித முயற்சியும் அதிகாரிகள் மேற்கொள்ளாததால், அக்கிராம மக்கள் விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளிக் கட்டடம் வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டால் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க நேரிடும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.