நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,
விக்கிரவாண்டியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறது. அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள், திட்டங்கள் குறித்து முதல்வர், துணை முதல்வர் பரப்புரையில் பேசத்தயாரா? ஆளுநர் கேட்டுக்கொண்டதாலே இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை திமுக கைவிட்டது என்றார்.
அதேபோல் விக்கிரவாண்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சூரப்பட்டு கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.ஷண்முகம் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நாளை மறுநாள் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததால் வாக்காளர் அல்லாதவர்கள், வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.