தென்காசி மாவட்டம் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள செங்கோட்டையில் விஸ்வநாதபுரம் பகுதியில் வசிப்பவர் மும்தாஜ் (65) வயதான மூதாட்டி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளன. மகள் வெளியூரில் செட்டிலாக, மகன் சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். எனவே மும்தாஜின் மகன் வழிப் பேரனான அப்துல்காலம் (32 வயது) செங்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தனியாக வசித்த மும்தாஜ் தன்னுடைய பணத்தைக் கொண்டு கொடுக்கல் வாங்கல், தவிர முட்டை வியாபாரமும் செய்து வந்தாலும் பணம் புரண்டிருக்கிறது. சிறிதளவு சொத்தும் வைத்திருக்கிறார். குடிப்பழக்கம் கொண்ட அப்துல்கலாம் அடிக்கடி செலவுக்குப் பாட்டியிடம் பணம் கேட்டுப் பெற்று வந்திருக்கிறார். அதோடு பாட்டி மும்தாஜிடமிருக்கும் சொத்தையும் கேட்டிருக்கிறாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (09/02/2020), நள்ளிரவு மது குடித்து விட்டு வந்த அப்துல்காலம் பாட்டி மும்தாஜ் வீட்டிற்குச் சென்று அவரிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார். அவரோ, காலையில் வா. பணம் தருகிறேன் என்று சொன்னதை அப்துல்கலாம் ஏற்காமல், அவரோடு வாக்குவாதம் செய்ய, அது முற்றிப் போய் ஆத்திரமான அப்துல்கலாம் அருகில் கிடந்த கட்டையால் பாட்டி என்று கூடப் பாராமல் தாக்கியதோடு மண்டையிலும் அடித்திருக்கிறார். படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிய மும்தாஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு சிகிச்சை பலனின்றி மும்தாஜ் இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த நகர போலீசார் தலைமறைவான ஆட்டோ டிரைவர் அப்துல்கலாமைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.