கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் உள்ள நாணல்காடு என்னும் கிராமத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதுகாப்பாகத் தங்க இடமின்றி, உணவின்றி தத்தளித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் மேடான பகுதியில் தஞ்சம் அடைந்து மீட்புப் பணிக்குழுவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.